1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (15:11 IST)

ஆளுனர் மாளிகை அறிக்கை பொய்..? என்ன நடந்தது? – காவல்துறை வெளியிட்ட வீடியோ!

Governor house attack
ஆளுனர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவத்தில் ஆளுனர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்கள் பொய்யானவை என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.



சமீபத்தில் சென்னை ஆளுனர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச மர்ம ஆசாமி ஒருவர் முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அந்த நபரை மடக்கி பிடித்து போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் கருக்கா வினோத் என்பதும் ஏற்கனவே அவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ஆளுனர் மாளிகை ராஜ்பவன் வெளியிட்ட அறிக்கையில், குற்ற்வாளி ஒருவர் அல்ல பலபேர் வந்தார்கள் எனவும், அவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் நுழைவு வாயில் கேட் சேதமடைந்ததாகவும், மேலும் தப்பி ஓட முயன்ற கருக்கா வினோத்தை ஆளுனர் மாளிகை ஊழியர்கள் பிடித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் கருக்கா வினோத் தனி ஆளாக பெட்ரோல் பாட்டில்களுடன் வருவதும், அவர் அதை வீச முயன்றபோது பணியில் இருந்த தமிழக காவல்துறையினர் அவரை மடக்கி பிடிப்பதும் பதிவாகியுள்ளது. இதை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ள தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள தகவல்கள் பொய்யானவை என விளக்கமளித்துள்ளார்.

Edit by Prasanth.K