ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து ஆதரவாளர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது..! சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்..!!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் நேற்று படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகத் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே ஹாலில் ஆம்ஸ்ட்ராங் உடலை அஞ்சலிக்காக வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தடையை மீறி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தள்ளதோடு, பதற்றமான சூழல் நிலவுகிறது.
போராட்டக்காரர்களிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கைது செய்து வருகின்றனர். இதனால் சென்ட்ரல் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.