1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 மார்ச் 2025 (10:50 IST)

சுனிதா வில்லியம்ஸ் உடல்நலன், மனநலனால் சாதனை படைத்துள்ளார்! - இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை!

சுனிதா வில்லியம்ஸ் உடல் நலன், மன நலன் சிறப்பாக இருந்ததால் காமாண்டராக இருந்து சிறப்பாக சர்வதேச விண்வெளி மையத்தை வழிநடத்தி இருக்கின்றார் என சந்திராயன் திட்ட  முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

 

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குனர்மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு முன்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  செயற்கை நுண்ணறிவால் கல்வியில் மாற்றம் ஏற்படும் எனவும், செயற்கை  நுண்ணறிவுக்கு ஏற்றபடி  மாணவர்கள் , கல்வி நிறுவனங்கள் தயாராகி கொள்ள  வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

இந்த கால காலகட்டம் அடுத்து ஒரு பாய்ச்சலுக்கு போகும் காலமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

 

முதலில் விமான பயணமே சவாலாக இருந்தது, அதன் பின் எளிதாகி விட்டது எனவும், விமான பயணம் போல் விண்வெளி பயணம்  இப்போது எளிதாகி விட்டது எனவும் தெரிவித்தார்.விண்வெளிக்கு பலவகைகளில் செல்ல முடியும், அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது என தெரிவித்த அவர், 72 வயது பெண்மணி அங்குபோய் விட்டு மீண்டும் போக போகின்றேன் என சொல்லும் அளவிற்கு விண்வெளி பயணம் எளிதாக இருக்கின்றது எனவும்,  ஆனால் இந்த பயணங்கள் ஒரு வருடம் முன்பாக திட்டமிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

சர்வதேச விண்வெளி மையத்திற்கு மாதம் ஒரு கலன் சென்றே ஆக வேண்டும் எனவும், ஒரு வருடத்திற்கு 100 டன் எரிபொருள் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் அடிக்கடி கலன்கள் செல்லும் எனவும், அங்கு எப்பவும் 7 முதல் எட்டு பேர் பணியில் இருப்பார்கள் , ஆட்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பார்கள் எனவும் தெரிவித்தார். சுனிதா வில்லியம்ஸ் போயிங் கலனில் சென்ற நிலையில் அது பழுதானதால் வேறு கலன் உடனே அனுப்ப முடியவில்லை என தெரிவித்த அவர், இந்த பயணங்கள் மிக மிக சகஜமாகவை எனவும் தெரிவித்தார். சுனிதா வில்லியம் இதைவிட அதிக நாட்கள் விண்வெளியில்  இருந்திருக்கிறார், விண்வெளியில் அதிக  மரத்தான் ஓடியவர் என்ற பயிற்சியும் அவருக்கு  உண்டு என தெரிவித்தார்.

 

இங்கு திரும்புவதற்கு முன்பு வரை  சர்வதேச விண்வெளி மைய கமாண்டராக  இருந்துள்ளார் எனவும், அவருக்கு உடல்நலன் , மனநலன்  ஆகியவை சிறப்பாக இருக்கிறது எனவும், அது இருப்பதால்தான் கமாண்டராக இருந்து வழிநடத்தி இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.எலான்மாஸ்க்,  போயிங் இடையே போட்டியை தாண்டியும் கூட இவர்களை அழைத்துச் செல்வதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்த அவர், சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காக்காரர், தற்பொழுது ரஷ்யாவை சேர்ந்தவரிடம் தலைமை பொறுப்பை ஒப்படைத்து வந்திருக்கிறார் எனவும்,  சர்வதேச விண்வெளி மையம் என்பது ஒருவருக்கு ஒருவர் உதவி கொள்ளும் விதமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

 

குலசேகரபட்டினம் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது எனவும் தனியார் துறையில் ராக்கெட் அனுப்புவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்த அவர்,  பெரிய ஏவுதளங்கள் வேண்டும் என்று கிடையாது,  குறைந்த எரிபொருள் செலவில் இருந்து அனுப்பக்கூடிய இடமாக குலசேகரப்பட்டினம் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

 

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் குணசேகரப்பட்டணம் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கலாம் எனவும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். சுனிதா வில்லியம்ஸ் ஒரு பெண்ணால் எவ்வளவு நாளாக விண்வெளியில் இருக்க முடியும் என்பதை உணர்த்தி இருக்கிறார் எனவும், பத்து நாட்களில் திரும்பி இருக்க வேண்டியவர், அங்கு இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது எனவும், சர்வதேச விண்வெளி மையத்தில் தலைமை பொறுப்பு ஏற்று பணிபுரியும் அளவிற்கு  அவரது உடல் நலம் சிறப்பாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

 

விண்வெளிக்கு சென்று வருபவர்கள் எல்லாருக்கும் உடல் நல பிரச்சினைகள் இருக்கும், உடலில்  பல மாற்றங்கள் இருக்கும் எனவும், பூமிக்கு வந்தால்   இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும், அதை தவிர வேறு எந்த பிரச்சனையும் இருக்காது எனவும் சந்திராயன் திட்ட  முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.