ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு! – அரசு பேருந்தை முற்றுகையிட்ட மாணவர்கள்!
கள்ளக்குறிச்சியில் ஆசிரியர் ஒருவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என மாணவர்கள் போராட்டம் நடத்தியது வைரலாகியுள்ளது.
ஆசிரியர்கள் குழந்தைகளின் நலனில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக உள்ளனர். சில சமயங்களில் ஆசிரியர்கள் குறித்த ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் குறித்த செய்திகள் சமூகத்தை அதிர்ச்சியடைய செய்தாலும், பல சமயங்களில் நியாயமான ஆசிரியர்கள் பற்றிய செய்திகள் ஆசிரியர் மீதான மதிப்பை அதிகரிக்கும் வகையில் அமைகின்றன. அவ்வாறான சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சூளாங்குறிச்சி அரசு நடுநிலைப் பள்ளியில் ஒருவர் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். மாணவர்களின் நன்மதிப்பை பெற்ற அவருக்கு சமீபத்தில் பணியிட மாறுதல் உத்தரவு வந்துள்ளது. இந்நிலையில் அவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை மறித்து போராட்டம் செய்துள்ளனர். ஆசிரியருக்காக மாணவர்கள் நடத்திய இந்த போராட்டம் வைரலாகியுள்ளது.