திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 3 ஜனவரி 2019 (07:39 IST)

மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு! இவர்களில் யார் திருவாரூர் வேட்பாளர்?

தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் திருவாரூர் தொகுதியில் மட்டும் தேர்தல் அறிவிப்பு என்பது திமுகவுக்கு கொடுக்கப்படும் நெருக்கடி என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என முதல்முதலில் அறிவித்து குட்டையை குழப்பிய ஸ்டாலினுக்கு பாடம் புகட்டும் வகையில் அவருக்கு நெருக்கடி கொடுக்கவே இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தேர்தலில் திமுகவை தோற்கடித்துவிட்டால் அவரது இமேஜை காலி செய்யலாம் என்பதே அவருக்கு எதிரானவர்களின் திட்டம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நெருக்கடியில் இருந்து திமுக தப்பிக்க வேண்டுமானால் திருவாரூரில் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும். அந்த வகையில் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகிய மூவரில் ஒருவர் திருவாரூரில் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக திமுக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'ஜனவரி 4ஆம் தேதி மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் திமுக வேட்பாளர் யார் என்பது தெரிவிக்கப்படும் என்றும், திருவாரூர் வேட்பாளர் நானா, துரைமுருகனா, டி.ஆர்.பாலுவா என்பது அப்போது தெரியவரும்” என்றும் கூறினார். மேலும் திருவாரூரில் மட்டும் தேர்தல் அறிவித்ததில் சூட்சமம் உள்ளது. மத்திய, மாநில அரசு, தேர்தல் ஆணையம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து செயல்படுகின்றனர். 18 தொகுதிக்கு தேர்தல் நடத்த முன்வராமல் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்த காரணம் என்ன?. எப்படி இருப்பினும் தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.