போகி பண்டிகை காரணமாக சென்னையில் உருவாகியுள்ள புகைமூட்டத்தால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தை முதல் நாளில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதற்கு முதல் நாள் பழைய பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அவ்வாறாக இன்று தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்கள் அதிகாலையே பழைய பொருட்களை எரித்து போகி கொண்டாடி வருகின்றனர். டயர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை எரித்து காற்று மாசுபாடு ஏற்படுத்த வேண்டாம் என மாசுக்கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
அதிகாலையே போகி கொண்டாடப்பட்டதால் சென்னையின் பெரும்பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளித்தன. பனி மூட்டம், புகை காரணமாக வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. சென்னையில் சூழ்ந்துள்ள பனி, புகை காரணமாக விமானங்கள் இயக்குவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
கடும்பனி, புகை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டெல்லி, பெங்களூரில் இருந்து சென்னை வர வேண்டிய 3 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
Edit by Prasanth.K