பார்க்கிங் பிரச்சனைக்கு விடிவுகாலம்: சென்னையில் ஸ்மார்ட் பார்க்கிங்
சென்னை மக்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வாகனங்கள் பார்க்கிங் செய்ய இடம். மனிதர்கள் குடியிருக்கும் பல வீடுகள் பார்க்கிங் அளவுக்குத்தான் இருக்கும் நிலையில் தனியாக வாகனங்களை பார்க்கிங் செய்ய இடத்திற்கு எங்கே போவது. எனவே பெரும்பாலான வாகனங்கள் சென்னையில் சாலைகளில், தெருக்களில் தான் நிறுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் சென்னையில் குறைந்த கட்டணம் மற்றும் பாதுகாப்பான முறையில் வாகனங்களை பார்க்கிங் செய்யும் ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாக ஒரு சந்தோஷமான செய்தி வெளிவந்துள்ளது
சென்னை மாநகராட்சியும் எஸ்.எஸ்.டெக் என்ற நிறுவனமும் இணைந்து சென்னை மாநகரில் ஸ்மார்ட் பார்க்கின் சிஸ்டம் என்ற புதிய முறையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் செயல்பட்டுவரும் இந்த திட்டம் விரைவில் முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த திட்டத்தின்படி சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்ய ஆன் லைன் மூலமாக இடத்தை புக் செய்து கொள்ளலாம். இதற்கென சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் பார்க்கிங் என்னும் செயலியை தொடங்கியுள்ளது. வாகனங்களை பார்க்கிங் செய்யும் போதே வாகனத்தின் பதிவு எண் மற்றும் வாகனம் பார்க்கிங் செய்த நேரம் உள்ளிட்ட விவரங்கள் கட்டுபாட்டு அறைக்கு வந்துவிடும். கார்களை பார்க்கிங் செய்ய குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை வசூலிக்கப்படவுள்ளது. இருச்சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது
முதல்கட்டமாக தி.நகர் பாண்டி பசார் சாலை, வாலாஜா சாலை, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலை, பெசண்ட் நகர் கடற்கரை சாலை, சென்னை மெரினா கடற்கரை டி.ஜி.பி.அலுவலகம் எதிரே உள்ள சாலை, அண்ணா நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி செய்யப்படவுள்ளதாகவும், இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து நகர் முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது