தம்பி ஆர்.ஜே.பாலாஜி தோலுரிச்சு காட்டிட்டார்! – மூக்குத்தி அம்மனுக்கு சீமான் வாழ்த்து!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் மதத்தின் பெயரால் நிகழும் கொடுமைகளை தோலுரித்து காட்டியுள்ளதாக சீமான் பாராட்டியுள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடித்து தீபாவளி அன்று ஓடிடியில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். இதில் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படம் பரவலான வரவேற்பையும், அதே சமயம் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
இந்த படத்தை சமீபத்தில் பார்த்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டரில் “மதத்தின் பெயரால் சமகாலத்தில் நிகழும் கொடுமைகளையும், மதத்தைக் கொண்டு மக்களைப் பிரித்து வாக்குவேட்டையாட முற்படும் அரசியல் நாடகங்களையும் தோலுரிக்கும் மூக்குத்தி_அம்மன் திரைப்படம் கண்டு வெகுவாக ரசித்தேன்.” என்று கூறியுள்ளார்.
மேலும் “மக்களை விழிப்பூட்டி எழச்செய்யும் வகையில் சமூகக்கருத்துக்களை நகைச்சுவையோடு தந்திருக்கிற இயக்குநர்கள் தம்பி ஆர்.ஜே.பாலாஜி, தம்பி என்.ஜே. சரவணன் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.