ரஜினியை திடீரென சந்தித்த சீமான்.. விஜய்க்கு செக் வைக்கப்பட்டதா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு திடீரென சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில நாட்களாக நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய் கட்சியின் கொள்கைகள் தன்னை திருப்திப்படுத்தவில்லை என்றும் அதனால் அவருடன் கூட்டணி வைக்க முடியாது என்றும் சீமான் அறிவித்துள்ளார். இதன் பின்னணியில், விஜய் ரசிகர்கள் சீமானை கடுமையாக விமர்சித்து வரும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், அரசியலில் தற்போது தனித்து காணப்படும் சீமான், திடீரென ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழகத்தில் தற்போது வலிமையான திமுக கூட்டணி ஒருபுறமும், அதிமுக கூட்டணியும் இன்னொரு புறமும் திகழ்கின்றன. இதனுடன் விஜய் கட்சியும் அரசியலில் புதிதாக இடம் பிடித்திருப்பதால், விஜய்க்கு தனது கட்சியை விட அதிக வாக்குகள் கிடைத்து விடுமோ என்ற கவலையில் தான் சீமான் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால், பிரதமர் மோடி கேட்டு கொண்டும் பாஜகவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த், சீமானுக்கு ஆதரவு அளிப்பாரா என்பது குறித்து காலமே பதிலளிக்க வேண்டும்.
Edited by Siva