செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (19:24 IST)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஜிஎஸ்டி செலுத்த மாட்டோம்? இது புது டிவிஸ்ட்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தாமல், மத்திய அரசிடம் எதிர்ப்பை புதிய விதத்தில் வெளிப்படுத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். 
 
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு...
 
தமிழர்களின் உரிமைகளை பெற்றிட, விவசாயத்தை காப்பாற்ற, அடிப்படை தேவைகளை பெறுவதற்கு என போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், இரயில் மறியல், அரசு அலுவலகங்கள் முற்றுகை, தீக்குளிக்க முயற்சி, தீக்குளிப்பு என பல்வேறுவிதமாக நமது உணர்வை வெளிப்படுத்தினாலும் மத்திய அரசு எதற்கும் செவிசாய்க்காமல், உச்சபட்ச அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் இருப்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களை, ஏழு கோடி உயிர்களையும் உணர்வுகளையும் ஊதாசினப்படுத்துவதாகவே தெரிகிறது. 
 
நமது போராட்ட முறை நூதனமான முறையில் இந்தியா முழுவதும் திரும்பி பார்க்கும் வகையில் செய்யவேண்டும். நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள வரிவசூலித்து வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களுக்கு வரிகட்டாமல் இருந்தோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சரக்கு மற்றும் சேவை வரியை செலுத்தாமல் நமது எதிர்ப்பை வெளிப்படுத்தினால் என்ன என்று தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 7.39 லட்சம் வணிக நிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவதற்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன. கடந்த வருடம் ஜூலை 1 முதல் நவம்பர் 30 வரை வசூலிக்கப்பட்ட தமிழ்நாட்டின் சரக்கு மற்றும் சேவை (GST) வரி ரூ.8,739 கோடியாகும். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், தொழில் புரியும் நிறுவனங்கள், வியாபாரம் செய்யும் வணிகர்கள் அனைவரும் சரக்கு மற்றும் சேவை (GST) வரி செலுத்தாமல் புறக்கணித்து எதிர்ப்பை தெரிவிக்கலாம் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.