திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2016 (20:48 IST)

கரூரில் இரவு பகலாக நடக்கும் மணல் கொள்ளை : அதிர்ச்சி தகவல்

கரூரில்இரவு பகலாக தினந்தோறும் ஏராளமான லாரிகளில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது என்று கரூரில் கனிம வள முறைகேடு சகாயம் ஆய்வு குழு ஆதரவு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறியுள்ளார்.


 

 
கரூர் அருகே மண்மங்கலம் வட்டம், புஞ்சை புகளூர், தவிட்டுப்பாளையம், கடம்பங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்று மணல் எடுக்க திட்டமிட்டு அப்பகுதியில் கடுஜோராக மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும், அதை ஆய்வு செய்ய கரூர் வந்த கனிம வள முறைகேடு சகாயம் ஆய்வு குழு ஆதரவு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறியுள்ளார். 
 
மேலும், அப்பகுதியில் ஆய்வு செய்ய முயலும் போது, அங்கிருக்கும் மணல் கொள்ளைக்கு துணை போகும் குண்டர்கள் மிரட்டியும், போலியாக வழக்கு பதிவு செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
 
அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ”அப்போது, கேரளாவில் 45 ஆறுகள் ஒடியும் அங்கு மணல் எடுத்தால் குண்டர் சட்டம் பாயும் என்பதால் அங்கே ஒடும் ஆறுகளில் மணல் எடுப்பதில்லை. ஆந்திரா, கர்நாடகாவில் ராட்சத இயந்திரங்களை கொண்டு மணல் அள்ள அனுமதியில்லை. 
 
ஆனால் தமிழகத்தில் ஒடும் 33 ஆறுகளில் தொடர் மணல் கொள்ளையும், இரவு பகலாக கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எந்த விதியையும் பின்பற்றுவதில்லை. மேலும், மூன்று அடிக்கு மேல் மணல் அள்ளக்கூடாது, குறிப்பாக இரவில் அள்ளக்கூடாது மற்றும் இரண்டு இராட்சத இயந்திரங்களுக்கு மேல் பயன்படுத்த கூடாது என்று விதிமுறை உள்ளது. 


 

 
ஆனால் இந்த விதிகளை தமிழக அளவில் யாரும் பின்பற்றுவதில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா கரூரில் 2011 சட்டமன்ற தேர்தலின் போது மணல் கொள்ளைக்கு முடிவு கட்டப்படும் என்றார். ஆனால் எந்த விதமான வரைமுறையற்று, தினசரி 90 ஆயிரம் லாரிகளில் லோடு மணல் தினந்தோறும் தமிழகத்தில் அள்ளப்படுவதாகவும் தெரிகிறது.
 
தமிழகத்தில் இந்த மணலின் பயன்பாடு 40 சதவிகிதம் மட்டுமே, மீதி 60 விழுக்காடு அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா மற்றும் மாலத்தீவு, அரபுநாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 
மேலும் இப்பகுதியில் உள்ள ஆற்றுமணல்களை தற்போது புதிதாக அள்ளத் தொடங்கியுள்ளதாக தகவல் தெரிந்துள்ளது. கரூர் மாவட்டத்தில், மண்மங்கலம் வட்டம், புகளூர், தோட்டக்குறிச்சி, கடம்பங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் புதிய ஆற்று மணல் கொள்ளை திட்டத்தை அறிவித்து அதற்கான வேலைகளும் தொடங்கப்பட்டுள்ளது. 
 
அதை நாங்கள் ஆய்வு மேற்கொள்ள சென்றதற்கு கொலைமிரட்டல் விடுத்ததோடு, தாக்கவும் முயற்சித்துள்ளனர். ஏற்கனவே சாயப்பட்டறைகளினால் ஆற்றின் புனிதம் கெட்டுள்ளதாகவும், 
 
ஏதோ ஒரு அளவு அந்த சாயப்பட்டறைகளின் மாசுக்களை சுத்திகரித்து புதிய நீராக மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த மணலையும் சுரண்டினால் மக்கள் நீர் ஆதாரம் கெடுவதோடு, விவசாய நிலத்திற்கும், பொதுமக்களின் குடிநீருக்கும் அபாய சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் ஏற்கனவே தற்போது தமிழகத்தை ஆளும் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை மீறி,  உள்ளூர் அமைச்சர்கள் தயவால் கடும் மணல் கொள்ளை தமிழகம் முழுவதும் ஏற்பட்டு வருகிறது. இதே பாணியில் கரூரில் மணல் கொள்ளை களை கட்டியுள்ளது. 
 
இதை தடுக்காவிட்டால் மணல் கொள்ளையினால் பாதிக்கப்படும் விவசாயிகளையும் பிற அமைப்புகளை ஒன்று சேர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்” என்று எச்சரிக்கை விடுத்தார். 

சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்