புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (15:25 IST)

விண்வெளியில் முடிந்தது படப்பிடிப்பு! – பூமிக்கு திரும்பிய ரஷ்ய குழு!

உலகிலேயே முதன்முறையாக படப்பிடிப்பு நடத்த விண்வெளி சென்ற ரஷ்ய குழு பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளது.

தொழில்நுட்ப வசதியால் உலகம் முழுவதும் படப்பிடிப்பு பாணிகள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றது. ஹாலிவுட் உள்ளிட்ட பல சினிமா துறைகளில் கடலுக்கு அடியில், விமானத்தில் என பல்வேறு இடங்களில் படப்பிடிப்புகள் நடத்தி படங்கள் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் விண்வெளியில் மட்டும் கால்பதிக்காமல் இருந்த திரைத்துறையினர் தற்போது விண்வெளியிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். முன்னதாக ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தனது படப்பிடிப்பை சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடத்த திட்டமிட்டார்.

இந்நிலையில் தற்போது ரஷ்ய படக்குழு ஒன்று அக்டோபர் 5ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் படப்பிடிப்பை தொடங்கியது. 12 நாட்கள் தொடர்ந்த படப்பிடிப்புகளை வெற்றிகரமாக முடித்த நிலையில் படக்குழுவினர் சோயூஸ் எம்.எஸ் 18 மூலமாக இன்று கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கினர்.

ரஷ்ய இயக்குனர் க்ளிம் ஷிபென்கோ இயக்கும் “சேலஞ்ச்” என்ற இந்த படத்தில் ரஷ்ய நடிகர் யுரியா பெரிசில்ட் நடிக்கிறார்.