வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (13:08 IST)

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.!!

MBBS Rank List
2024-25ம் ஆண்டுகான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.  
 
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் ஜூலை 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. 

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம் போக மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது. 
 
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS) பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Paramedical) பட்டப் படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.   

மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில் நாமக்கல் மாணவர் ரஜினீஷ் முதலிடம் பிடித்துள்ளார். 2-வது இடத்தை சென்னை மாணவர் சையது யூசுப், 3-வது இடத்தை சென்னை மாணவி சைலஜா பிடித்தனர். 4-வது இடத்தை ஸ்ரீராமும், 5-வது இடத்தை ஜெயதி பூர்வஜா பிடித்தனர். தரவரிசை பட்டியலில் 6-வது இடத்தை நாமக்கல் மாணவர் ரோகித்தும், 7-வது இடத்தை சபரீசனும் பிடித்துள்ளனர். 


மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளிகளுக்கான தரவரிசை பட்டியலில் மாணவி ரூபிகா முதலிடம் பிடித்துள்ளார். 2-வது இடத்தை சென்னை தைசாப்பேட்டை பள்ளி காயத்ரி தேவியும், 3-வது இடத்தை தண்டராம்பட்டு மாணவி அனுஷியாவும் பிடித்தனர்.