வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2024 (13:27 IST)

மக்களே ரெடியா.! கிண்டி சிறுவர் பூங்காவிற்கு இன்று ஒரு நாள் அனுமதி இலவசம்..!

Guindy Park
புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்காவை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்த நிலையில், பார்வையாளர்களுக்கு இன்று ஒரு நாள் அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தேசிய சிறுவர்  பூங்காவில் மான்கள், குரங்குகள், பறவைகள் என ஏராளமான வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவுக்கு விடுமுறை நாட்களில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் குழந்தைகளுடன் வந்து செல்வார்கள்.
 
ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் முதல் 9 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்லும் பூங்காவாக இது இருந்து வருகிறது. இந்த நிலையில் ரூ.20 கோடி செலவில் இந்த பூங்காவை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி முதல் மூடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

வன உயிரினங்களின் அமைவிடங்கள், இயற்கையாக காடுகளில் உள்ளது போன்ற அமைப்புடன் ஏற்கெனவே இருந்தவைகள் அனைத்தையும் மாற்றி சீரமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, சிறுவர்களுக்கான நூலகம், விழா அரங்கம், பார்வையாளர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 

பறவைகள், விலங்குகளின் சிறப்பம்சங்கள், அதன் வாழ் வியல் முறை ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் ‘கியூஆர் கோடு’ அமைக்கப்பட்டிருக்கிறது. புதிய உள்கட்ட மைப்பு வசதிகள், உணவகம், வாகன நிறுத்தும் இடம், விளையாட்டு உபகரணங்கள் என சிறுவர் பூங்கா உலகத் தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

குறிப்பாக ‘செல்ஃபி பாயிண்ட்’ என்று சொல்லப்படும் “அய் லவ் கிண்டி சிறுவர் பூங்கா” என்ற இடமும் அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் மூடப்பட்டபோது, ஆறு மாதத்தில் இதற்கான பணிகள் நிறைவு பெற்று மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆறு மாதத்தை கடந்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

Stalin
முதல்வர் ஸ்டாலின் திறப்பு:
 
இந்நிலையில் பணிகள் முடிவடைந்த நிலையில், புனரமைக்கப்பட்ட கிண்டி பூங்காவை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் கிண்டி பூங்காவை சுற்றி பார்க்க பார்வையாளர்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
நாளை முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பூங்காவை இலவசமாக பார்வையிடலாம் என்றும் ஐந்து முதல் 12 வயது உடையவர்களுக்கு பத்து ரூபாயும், பெரியவர்களுக்கு 60 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.