இது சரியல்ல… பாஜவை விமர்சித்த அதிமுக!
யாருமே விரும்பாத கசப்பான சம்பவம் மதுரை விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது என ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
சமீபத்தில் மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்த நிலையில் அவரது உடல் நேற்று மதுரைக்கு வந்தது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த வருகை தந்தார்.
அப்போது பாஜகவினரும் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் நிதியமைச்சர் அஞ்சலி செலுத்தி சென்ற உடன் அஞ்சலி செலுத்தலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது பாஜகவினர் செருப்பு வீசியதாக தெரிகிறது. மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதனையடுத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்த நிலையில் அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 24 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இது குறித்து கூறியுள்ளதாவது, விரும்பத்தகாத வகையில் பாஜக தொடர்கள் நடந்து கொண்டது வேதனையளிக்கிறது. யாருமே விரும்பாத கசப்பான சம்பவம் மதுரை விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது. மருத்துவர் சரவணன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது என பேட்டி அளித்துள்ளார்.