புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (09:46 IST)

ஆய்வுக்கு வந்த அதிகாரி; அதிர்ச்சியில் இறந்த ரேசன் கடை ஊழியர்! – அரியலூரில் அதிர்ச்சி!

அரியலூரில் ரேசன் கடையை ஆய்வு செய்ய அதிகாரி வந்ததை கண்டு ஊழியர் அதிர்ச்சியில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் குருவாலப்பர் கோவில் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர் புதுச்சாவடி கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல கடையில் ரேசன் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது ஆய்வு நிமித்தம் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் தீபா அந்த ரேசன் கடைக்கு சென்றுள்ளார்.

ஆய்வு செய்ய அதிகாரி வருவதை பார்த்த பழனி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனை அனுப்பியுள்ளனர். மருத்துவமனையில் அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.