ரஜினி போட்ட திடீர் தடா... அதிர்ந்து போன மன்றத்தினர்!!
ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவோ, ஆதரவாகவோ, வாக்கு சேகரிக்கக் கூடாது என திருச்சி ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தயாராகி வருகின்றனர்.
அதேபோல ரஜினி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது.
வரும் உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே, மன்றத்தின் பெயர் கொடியை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கக் கூடாது. ரஜினியின் பெயர் புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தற்போது, ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவோ, ஆதரவாகவோ வாக்கு சேகரிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் சிலர் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டிருந்ததால், திருச்சி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இந்த அதிரடி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.