தடுப்பு சுவர் சரிந்த புழல் ஏரி… பாதுகாப்பாக உள்ளதாக செயற்பொறியாளர் அறிவிப்பு!
சென்னையை சூரையாடிய மிக்ஜாம் புயல் கரையைக் கடந்து 4 நாட்களுக்கு மேலாகிவிட்டாலும், இன்னமும் அது சென்னையில் உருவாக்கி சென்ற பாதிப்புகளின் தாக்கம் குறையவில்லை. பல இடங்களில் குடியிருப்புகள் வெள்ள நீரில் மிதந்து கொண்டிருக்கின்றன. அரசுடன் இணைந்து தன்னார்வலர்கள் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பெருமழை காரணமாக சென்னை புழல் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புழல் ஏரியின் ஒரு பக்க தடுப்பு சுவர் சரிந்து விழுந்து அந்த பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டது. இதனால் கரையுடைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் மண்ணரிப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் போட்டு மட்டப்படுத்தப்படும் பணிகள் நடந்து வருவதாகவும், புழல் ஏரி பாதுகாப்பாக இருப்பதாகவும் செயற்பொறியாளர் நீவது தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமைச்சர் துரைமுருகனும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது புழல் ஏரியால் எந்த பாதிப்பும் ஏற்படாது மக்கள் அச்சப்பட தேவையில்லை எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.