புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 மே 2020 (15:06 IST)

அதிகரிக்கும் கொரோனா; அலர்ட்டான புதுச்சேரி : தகரத்தை கொண்டு மூடிய எல்லை!

விழுப்புரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் எல்லைகளை தகரங்களை கொண்டு மூடியுள்ளது புதுச்சேரி அரசு.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திற்குள் உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியும் ஊரடங்கை கடுமையாக்கி தனது எல்லைகளை மூடியுள்ளது. எனினும் கடந்த மாதத்தில் புதுச்சேரியில் 7 புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இதனால் நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய அரசு தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்குள் நுழைய இருந்து 26 ஒத்தயடி பாதை மற்றும் கப்பி சாலை ஆகியவற்றையும் கூட மூடியது.

தற்போது கோயம்பேடு ஹாட்ஸ்பாட்டிலிருந்து விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகள் அதிகமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. விழுப்புரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் அதனுடனான தனது எல்லைகளை கடுமையாக கண்காணித்து வருகிறது புதுச்சேரி. விழுப்புரம் மாவட்டத்தினர் புதுச்சேரிக்குள் நுழைவதை தடுக்க முத்தயால்பேட்டை பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் கோட்டக்குப்பம் பகுதி 10 அடி உயரத்திற்கு இரும்பு தகரங்களை கொண்டு மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.