வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 4 மே 2024 (14:44 IST)

காவிரி பாசன மாவட்டங்களில் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குக! அன்புமணி ராமதாஸ்..!

Anbumani Stalin
காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்துக்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் தகிக்கும் வெப்பத்துக்கு காவிரி பாசன மாவட்டங்களும் தப்பவில்லை.
 
பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கோடைக்கால பயிர்களை நிலத்தடி நீரைக் கொண்டு காப்பாற்ற விவசாயிகள் போராடி வரும் நிலையில், அதற்குத் தேவையான மும்முனை மின்சாரத்தை வழங்காமலும், மின்வெட்டை நடைமுறைப்படுத்தியும் தமிழக அரசும் தாக்குதல் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
 
காவிரி பாசன மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் கோடைக்கால சாகுபடியாக நெல் பயிரிடப்பட்டு உள்ளது. நெல் தவிர கரும்பு, வாழை, பருத்தி, உளுந்து, எள், சோளம், பச்சைப்பயறு, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன. குறுவை மற்றும் சம்பா பருவ பயிர்களுக்கே மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், கோடைக்கால பயிர்களுக்கு காவிரி நீர் கிடைக்காது என்பது உழவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
 
ஆனாலும், நிலத்தடி நீரைக் கொண்டு கோடைக் கால சாகுபடி செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் பல பயிர்களை பயிரிட்டிருக்கின்றனர்.ஆனால், மும்முனை மின்சாரம் வழங்காதது, அடிக்கடி மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது போன்ற செயல்களால் உழவர்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் தமிழக அரசும், மின்சார வாரியமும் சிதைத்திருக்கின்றன.
 
காவிரி பாசன மாவட்டங்களில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பது தான் உழவர்களின் எதிர்பார்ப்பு ஆகும். மும்முனை மின்சாரத்தை நாள் முழுவதும் வழங்க முடியாவிட்டாலும் தினமும் 14 மணி நேரம் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
 
ஆனால், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 6 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை. விட்டு விட்டு வரும் மின்சாரமும் எப்போது வரும்? என்பது குறித்த முன்னறிவிப்பையும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிடுவதில்லை.
 
காவிரி பாசன மாவட்டங்களின் எந்தப் பகுதியிலும் கடந்த இரு மாதங்களில் தொடர்ச்சியாக 3 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை என்பது தான் உண்மையாகும். கடுமையான வறட்சி காரணமாக காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் பல நூறு அடி கீழே சென்று விட்டது.
 
அதனால், விவசாயிகள் அதிக குதிரைத்திறன் சக்தி கொண்ட நீர் இறைப்பான்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும், கூட அவற்றின் மூலம் குறைந்த அளவிலேயே தண்ணீர் எடுக்க முடிகிறது.
 
பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்ச வேண்டும் என்றால் மும்முனை மின்சாரம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்; அதுவும் தொடர்ச்சியாக 4 அல்லது 5 மணி நேரம் மின்சாரம் வந்தால் தான் குறிப்பிட்ட பரப்பளவிலாவது தண்ணீரை பாய்ச்ச முடியும். 2 அல்லது 3 மணி நேரத்திற்கு மட்டும் மின்சாரம் வழங்கப்பட்டால் அதனால் பயனில்லை. அதைக் கொண்டு பயிர்களுக்கு தண்ணீரைப் பாய்ச்ச முடியாது.
 
அதைவிடக் கொடுமை என்னவெனில், காவிரி பாசன மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மும்முனை மின்சாரமே வழங்கப்படுவதில்லை என்பது தான். அந்தப் பகுதிகளில் வழங்கப்படும் இருமுனை மின்சாரத்தைக் கொண்டு அதிக சக்தி கொண்ட நீர் இறைப்பான்களை இயக்க முடியாது.
 
அதனால், அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தினமும் குறைந்தது 12 மணி நேரமாவது தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி காவிரி பாசன மாவட்டங்களின் பல பகுதிகளில் உழவர் அமைப்புகளின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், உழவர்களுக்கு விடியல் கிடைக்கவில்லை.
 
தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவி வரும் சூழலில், அதன் பாதிப்புகளை குறைக்க வேண்டியதும், கோடைக்கால பயிர்களைக் காப்பாற்ற வேண்டியதும் அரசின் கடமை ஆகும். ஆனால், அதற்காக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாத தமிழக அரசு, இதுவரை வழங்கப்பட்டு வந்த மும்முனை மின்சாரத்தை நிறுத்தியும், குறைத்தும் உழவர்களின் துயரத்தை அதிகரித்திருக்கிறது.
 
குறுவை மற்றும் சம்பா பருவங்களில் தண்ணீர் இல்லாததால் கடுமையான இழப்பை சந்தித்த விவசாயிகள், கோடைக்கால சாகுபடியிலும் தண்ணீர் இல்லாமல் இழப்பை சந்தித்தால் மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்வர்.
 
எனவே, விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்திற்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தெந்த நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும் என்பது குறித்த அட்டவணையையும் வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.