ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (17:36 IST)

ஆன்லைன் ரம்மிக்கு பறிபோகும் அப்பாவி உயிர்கள்.! தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!!

Anbumani Stalin
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த உணவக உரிமையாளர் இராமு, அதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வாங்கிய ரூ.10 லட்சம் கடனை அடைக்க முடியாமல் அரக்கோணத்தை அடுத்த தணிகைப் போளூரில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
 
இராமுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தற்கொலை செய்து கொண்ட இளைஞர் இராமுவுக்கு 38 வயது தான். வாழ்க்கையில் மிகவும் கடினப்பட்டு முன்னேறி வந்த நிலையில் தான் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியுள்ளார். 
 
ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக தனியார் வங்கிகள், நண்பர்கள், உறவினர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ரூ.10 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கியுள்ளார். ஆன்லைன் ரம்மியிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள பல தருணங்களில் இராமு முயன்ற போதிலும் மீண்டும், மீண்டும் அதற்கு அடிமையாகி கடன் வாங்கி விளையாடியுள்ளார்.
 
ஆன்லைன் ரம்மி எந்த அளவுக்கு போதை மிக்கது? அது மனிதர்களை எந்த அளவுக்கு அடிமையாக்கும்? என்பதற்கு இராமு தான் கொடுமையாக எடுத்துக்காட்டு ஆகும். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள ஆறாவது உயிர் இராமு ஆவார். ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
 
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்து உயிர்கள் பலியாகி வரும் நிலையில், இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு ஆகும். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி 6 மாதங்களாகியும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. உச்சநீதிமன்றத்திற்கு மே 20-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படவிருக்கிறது. அதற்குள் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெறாவிட்டால் ஜூலை மாதம் வரை ஆன்லைன் ரம்மிக்கு தடை வாங்க முடியாது.

 
எனவே, கோடை விடுமுறை விடப்படுவதற்கு முன்பாக உச்சநீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.