திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 18 ஜூலை 2024 (15:11 IST)

விருதுநகர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு.! வழக்கு தொடர்ந்த விஜய பிரபாகரன்..!!

Vijayprabakaran
விருதுநகர் மக்களவை தொகுதியில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  விஜயபிரபாகரன்  வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றனர். 
 
இதனிடையே வாக்கு எண்ணிக்கையின்போது விருதுநகர் மக்களவை தொகுதியில் கடும் போட்டி நிலவியது.  தொடக்கம் முதலயே காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின்போதும் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர்.

இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்றார். தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று 4,379 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸின் மாணிக்கம் தாகூரிடம் தோற்றுப்போனார்.
 
இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,  விருதுநகரில் ஓட்டு எண்ணிக்கையின்போது குளறுபடி நடந்தது என்றும் விஜய பிரபாகரனை தோற்கடிக்க சூழ்ச்சி நடந்ததாகவும் குற்றம் சாட்டினர். மேலும் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 
இந்நிலையில் விருதுநகர் மக்களவை தொகுதியில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  விஜயபிரபாகரன்  வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.