ஆளுநர் வருகையை கண்டித்து போராட்டம்! 100-க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கைது.!!
சேலத்தில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்க வந்தார். இந்த நிலையில் துணை வேந்தர் ஜெகநாதனக்கு ஆளுநர் ஆதரவு தருவதை கண்டித்து சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் திரண்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக ஆளுநரை கண்டித்தும் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதன் காரணமாக பெரியார் பல்கலைக்கழகம் முன்பு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலீசார் மீண்டும் சோதனை நடத்தினர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தமிழ்த்துறைத் பேராசிரியர் அலுவலகம், கணினி அறிவியல் துறை பேராசிரியர் அலுவலகம் உள்ளிட்ட ஆறு அலுவலகங்களில் போலீசார் மீண்டும் சோதனை மேற்கொண்டனர்.