திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2024 (22:28 IST)

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

Annamalai Stalin
மதுவிலக்கு அமலாக்க திருத்த மசோதா கொண்டு வருகிறேன் என்று முதலமைச்சர் கூறுவது, இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, சட்டப்பேரவையில் விஷச்சாராய வழக்கு தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களைக் காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும் கடுமையாகவும் இல்லை என்றார்.

இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க முதற்கட்டமாக, தமிழ்நாடு மது விலக்குச் சட்டம், 1937-ல் திருத்த மசோதா ஒன்று நாளை (ஜூன் 29) சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கடந்த 2023-ம் ஆண்டு, 23 பேர் பலியாகக் காரணமாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு, கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான பின்பும், மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியைப் பதவி நீக்கம் செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


திமுக மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நெருக்கமான, போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக்குக்கு, திமுகவில் உயர் பதவி கொடுத்து, ரூ.2,000 கோடி சம்பாதிக்கும் வரை வேடிக்கை பார்த்தீர்கள் என்றும் இத்தனையும் செய்து விட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ல், தண்டனைகள் கடுமையாக இல்லை என்று திருத்த மசோதா கொண்டு வருகிறேன் என்று முதலமைச்சர் கூறுவது, இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.