விடுமுறையிலும் செயல்படும் தனியார் பள்ளி! பெற்றோர் வாக்குவாதத்தால் பரபரப்பு..!
கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில பகுதிகளில் தனியார் பள்ளிகள் வலுக்கட்டாயமாக மாணவர்களை வரவழைத்து பள்ளி வகுப்புகளை நடத்தி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கனமழை காரணமாக சென்னையில் இன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வளசரவாக்கத்தில் செயல்படும் தனியார் பள்ளி நிர்வாகம் வகுப்புகள் இயங்கும் என்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக வேறு வழியில்லாமல் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததாகவும், மாணவர்களுடன் வந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்துடன் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
மாணவ மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசே விடுமுறை அறிவித்துள்ள நிலையில், தனியார் பள்ளி நிர்வாகம் எந்த விதமான பொறுப்பும் இன்றி மாணவர்களை இந்த மழையிலும் பள்ளிக்கு வரவழைத்தது மிகவும் அநியாயம் என்று பெற்றோர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அரசு அந்த தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
Edited by Mahendran