வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (09:15 IST)

தேமுதிக மீது கை வைத்தால் என்ன ஆகும் என்று தெரிகிறதா? துரைமுருகன் குறித்து பிரேமலதா!

திமுக, அதிமுக என இரண்டு கூட்டணியிலும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிகவின் முகத்திரையை கிழித்தது திமுக பொருளாளர் துரைமுருகன் தான். தன்னிடம் தேமுதிக நிர்வாகிகள் கூட்டணி குறித்து பேச வந்ததாகவும், எங்கள் கூட்டணியில் இடமில்லை என்று கூறி அனுப்பிவிட்டதாகவும் துரைமுருகன் அளித்த பேட்டிதான் தேமுதிகவின் தலைகுனிவிற்கு காரணமாக இருந்தது. அதன்பின்னர்தான் அதிமுக கொடுத்த தொகுதிகளை மறுபேச்சின்றி வாங்கி கொள்ளும் நிலைமை தேமுதிகவிற்கு வந்தது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து கோடிக்கணக்கான ரூபாய்களை பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சோதனை குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியதாவது:
 
தேமுதிகவை அவமானப்படுத்த நினைத்த திமுக பொருளாளர் துரைமுருகன் தற்போது வருமானவரித்துறை சோதனையால் அவமானப்படுத்தப்பட்டு நிற்கின்றார். தேமுதிக மீது கை வைத்தால் என்ன ஆகும் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது' என்று கூறியுள்ளார். மேலும் திமுக வேட்பாளர்கள் அனைவரது  வீடுகளிலும்  வருமானவரிதுறை சோதனை நடத்த வேண்டும் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்‍.