பிரபாகரனுடன் இணைந்து புகைப்படம் எடுத்தேன் என்றும் அவர் எனக்கு விருந்து வைத்தார் என்றும் அந்த விருந்தில் ஆமை கறி இருந்தது என்றும் பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்றும் சீமான் கூறிய நிலையில் இத்தனை ஆண்டு காலமாக இதனை உண்மை என நம்பி வந்த பலர் தற்போது பிரபாகரனின் அண்ணன் மகனே அளித்த பேட்டியில் அப்படியெல்லாம் எதுவும் நடைபெறவில்லை என்று கூறியிருப்பதை அடுத்து, சீமான் இத்தனை நாளும் சொன்ன கட்டுக்கதைகள் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
சமீபத்தில் பிரபாகரன் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சீமான் பல வருடங்களாக ஊடகங்களில் எங்கள் குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருப்பது போன்ற போலியான தகவலை பரப்பி வருகிறார். அவர் சொல்வதெல்லாம் பொய்.
சீமான் எனது சித்தப்பா பிரபாகரனை சந்தித்தது உண்மைதான், ஆனால் அவர் சொல்வது போல் மணிக்கணக்கில் எல்லாம் அந்த சந்திப்பு நடைபெறவில்லை. எட்டு முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே நடந்தது. பிரபாகரனுடன் சீமான் புகைப்படம் எடுப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கும். சித்தப்பா பிரபாகரன் தன்னுடன் யார் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டாலும், அவர் அனுமதி அளிப்பார்.
ஆனால் அதே நேரத்தில் வெளி கேமிராவில் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது. குடும்ப உறவினர்களே ஆனாலும் பாதுகாப்பு காரணமாக இயக்கத்தின் கேமராவில் தான் புகைப்படம் எடுக்கப்படும். அதன் பிறகு அந்த புகைப்படத்தை அவர்களிடம் கொடுக்க சில கட்டுப்பாடுகள் உள்ளன. அப்படியே ஒரு வேளை, சீமானிடம் புகைப்படம் கொடுக்கப்படாமல் இருந்திருக்கலாம். அதனால், அவர் தனது அரசியல் தேவைக்காக இப்படி ஒரு எடிட் செய்த புகைப்படத்தை உபயோகித்து வருவதை எங்களால் புரிந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ஒரு ஆவணப்படம் எடுப்பதற்காக தான் சீமான் இலங்கை வந்தார். அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அந்த குழுவில் இடம் பெற்று இருந்தார். சந்தோஷ் இப்போது கனடாவில் இருக்கிறார். அவர் வாயை திறந்தால் இன்னும் பல விஷயங்கள் வெளியே வரும். மேலும், ஆமை கறி சாப்பிட்டது என்பதெல்லாம் சுத்த பொய். பிரபாகரன் அசைவம் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. இட்லிக்குள் கறி வைக்கும் பழக்கம் எல்லாம் எங்கள் குடும்பத்தில் கிடையாது. புட்டு போன்ற உணவு தான் நாங்கள் அதிகம் சாப்பிடுவோம். அதேபோல் பிரபாகரன் மனைவியை சீமான் சந்திப்பதற்கான வாய்ப்பே இல்லை.
அவர் எடுக்கும் ஆவணப்படம் உலகிற்கு தெரிய வேண்டும் என்பதற்காக தான் இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்ட ஊடக குழுவுடன் வந்தவர்தான் சீமான். அவ்வளவுதான். மேலும், பிரபாகரனோ, அவருடைய தளபதிகளோ, சீமானுக்கு ஆயுதப் பயிற்சி எதுவும் கொடுக்கவில்லை. அப்படியான புகைப்படங்கள் எல்லாம் எல்லாம் போலி. எனது சித்தப்பாவை ஒரு உணவு பிரியராக சமையல்காரர் போல் சித்தரித்து வருகிறார். அதனை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. ஒரு தேசிய தலைவருக்கு இப்படிப்பட்ட அசிங்கத்தை அவர் ஏற்படுத்தி வருகிறார். இதனை நான் பலமுறை என் நண்பர்களிடம் சொல்லி ஆதங்கம் அடைந்துள்ளேன்.
இங்கிலாந்தில் உள்ள தமிழ் கைம்பெண் ஒருவருக்கும் சீமானுக்கும் நெருக்கமான பழக்கம் இருந்தது. அந்த பெண்ணை தான் அவர் திருமணம் செய்வதாக இருந்தது, ஆனால் அந்த பெண்ணையும் அவர் ஏமாற்றி விட்டார்.
ஒருமுறை சீமான் டென்மார்க் இந்த சென்றபோதுதான் அங்குள்ள பலருக்கு திரள் நிதி வருவதை அவர் அறிந்தார். அதன் பின்னர் தான் அவர் திட்டமிட்டு ஒரு கட்சியை ஆரம்பித்தார். புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து திரள் நிதி பெறுவதற்காக அவர் கட்சி ஆரம்பித்துள்ளார். ஈழத்திற்காக போராட வேண்டும் என்று சீமானிடம் யாரும் கேட்கவில்லை. அந்த போராட்டத்தை நடத்துவதற்கான தகுதியும் அவருக்கு இல்லை என்று பிரபாகரன் அண்ணன் மகன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டியை வைத்து பார்க்கும் போது, பிரபாகரனை சீமான் சந்தித்திருந்தாலும், அவருடன் புகைப்படம் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்பதும், ஆமைக்கறி சாப்பிட்டதாக சொன்னது எல்லாம் பொய் என்றும் தெரிய வருகிறது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த ராஜீவ் காந்தி, இன்று அளித்த பேட்டியில் சில உண்மைகளை தெரிவித்துள்ளார். அதில், பிரபாகரனுடன் சீமான் இருக்கும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் உள்ள ஹார்ட் டிஸ்கை வாங்கி சீமானிடம் கொடுத்ததே நான் தான். சீமான் பேசுவது அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு. இதற்கெல்லாம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.