திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (11:19 IST)

பரிசுகள் வழங்குவதாக கூறி மோசடி; தபால் துறை எச்சரிக்கை!

சமீபகாலமாக தபால்துறை பெயரில் பரிசுகள் வழங்குவதாக நூதன கும்பல் மோசடியில் ஈடுபடுவதாக தபால்துறை எச்சரித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் சைபர் க்ரைம் அதிகரித்து வருகிறது. முக்கியமாக வங்கிகள் டிஜிட்டல் மயமானது முதலாக ஆன்லைன் பண மோசடி அதிகரித்துள்ளது.

வங்கிகளின் பெயரில் போன் செய்து வங்கி கணக்கு விவரங்களை பெறுதல், கார்டு மேல 13 எண்களை பெற்று மோசடி செய்தல் என சைபர் பண மோசடி குற்றங்கள் பல்வேறு விதமாக நடந்து வருகின்றன.

சமீப காலமாக போஸ்ட் ஆபீஸ் பெயரில் இவ்வாறான பண மோசடிகள் நடப்பதாக தெரிய வந்துள்ளது. இந்திய அஞ்சல் துறை அனுப்புவது போல சில மொபைல்களுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அஞ்சல் துறையில் பரிசு விழுந்திருப்பதாகவும் அதை பெற வங்கி கணக்கு உள்ளிட்டவை தேவை, கீழே உள்ள லிங்கில் விவரங்களை தர வேண்டும் என கேட்டு பெறுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்களை எச்சரித்துள்ள வேலூர் தபால் கோட்டம் ” சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் தபால் துறை அனுப்புவது போன்ற தகவல் வாட்ஸ் அப்பில் பலருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது . அதில் அஞ்சல் துறை பரிசுகள் வழங்குவதாகவும், போட்டிகள் நடத்துவதாகவும் கூறி லிங்கை தொடும் போதும் பிறந்த தேதி , செல்போன் எண் , வங்கி கணக்கு விவரங்கள் கேட்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

எனவே பொதுமக்கள் இதுபோன்ற போலியான மேசேஜுகள் வந்தால் அதில் உள்ள லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும், தனிநபர் தகவல்கள், வங்கி விவரங்களை அதில் பதிவேற்ற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.