1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 16 மே 2019 (12:52 IST)

பிரபல ரியல் எஸ்டேட் மோசடி கும்பல் கைது

சென்னை உள்பட பல பகுதிகளில் நிதி நிறுவனம் நடத்தி 50 கோடி ரூபாய் ஏமாற்றிய நான்கு பேர் மதுரையில் கைது செய்யப்பட்டனர்.


மதுரையை சேர்ந்த சரவணக்குமார், நமச்சிவாயம், கதிரவன், கணேசன் ஆகிய 4 பேரும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான வேலூர், சென்னை, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நிதிநிறுவனம் நடத்தி வந்தனர். தங்கள் நிதி நிறுவனத்தில் தவணை முறையில் பணம் கட்டினால் சில வருடங்களுக்கு பிறகு சொந்தமாக நிலம் வழங்கப்படும் என்ற இவர்களின் விளம்பரத்தை நம்பி பல ஆயிரம் மக்கள் இந்நிறுவனத்தில் பணம் கட்டியுள்ளனர். சுமார் 50கோடி பணம் சேர்ந்ததும் அதில் நிலங்களை வாங்கி தங்களது பெயரில் பதிவு செய்து கொண்டனர். சில நாட்களுக்கு பிறகு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
இதனால் பணம் கட்டி ஏமாந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வேலூரை சேர்ந்த விக்ரம் என்பவர் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் உத்தரவின்படி, வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில் மோசடி கும்பல் மதுரையில் உள்ள ஒரு பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் மோசடி கும்பல் நால்வரும் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைக்கு பிறகு சிறையிலடைக்கப்பட்டனர்.