காவிரி விவகாரத்தை மறக்க வைத்த நிர்மலாதேவி
அரசியல் கட்சிகள் ஒரு பிரச்சனைக்காக போராட்டம் செய்வார்கள். பின்பு அதைவிட சுவாரஸ்யமான பிரச்சனை வந்தால் உடனே அந்த பிரச்சனையை விட்டுவிட்டு அடுத்த பிரச்சனைக்கு தாவிவிடுவார்கள். இதுதான் கடந்த 50 ஆண்டுகால திராவிட கழகங்களின் நிலை.
கடந்த சில நாட்களாக காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ ஆகியவைகளுக்காக போராடிய கட்சிகள் அந்த பிரச்சனையை மறந்துவிட்டு தற்போது நிர்மலாதேவி விவகாரத்தை கையிலெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அதேபோல் இன்று எச்.ராஜா பதிவு செய்த ஒரு டுவீட்டுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மேலும் ஊடகங்களும் சுத்தமாக காவிரி பிரச்சனையை மறந்துவிட்டன. கவர்னர் பெண் நிருபரை கன்னத்தில் தட்டிய விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கிவிட்டன. இனி காவிரி பிரச்சனை அவ்வளவுதானா? என்று விவசாயிகளும் சாதாரண பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நிர்மலா தேவி, கவர்னர், எச்.ராஜா என செய்திகள் தடம் மாறி, காவிரி மேலாண்மை வாரியம் குறித்த செய்திகள் மறக்கடிக்கப்பட்டு வருவதை நெட்டிசன்கள் மட்டுமே சுட்டிக்காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.