கன்னத்தில் தட்டிய விவகாரம்: வருத்தம் தெரிவித்த கவர்னர்
நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவருடைய கன்னத்தை தட்டிய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நீங்கள் என் பேத்தியை போன்றவர் என்று கூறினார்.
கவர்னரின் இந்த செயலுக்கு அந்த பெண் பத்திரிகையாளர் தனது டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்தார். அதுமட்டுமின்றி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் ஒருசில கட்சி தலைவர்கள் கவர்னரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்றும் திமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்த நிலையில் பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் தட்டியது குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருத்தம் தெரிவித்துள்ளார். தன்னுடைய பேத்திபோல் நினைத்து கன்னத்தில் தட்டியதாகவும், அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ள கவர்னர், இதுகுறித்து அந்த பெண் நிருபர் அனுப்பிய இமெயில் தனக்கு கிடைத்ததாகவும், அவர் அவர் மனவருத்தமுற்று கூறிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அந்த பெண் நிருபருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கவர்னர் தெரிவித்துள்ளார்.