குடியரசு தினவிழா - போலிஸ் பாதுகாப்புத் தீவிரம் !
நாளை குடியரசு தினவிழாக் கொண்டாடப்பட இருப்பதை அடுத்து தமிழகம் முழுவதும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் நாளை 20 ஆவது குடியரசு தினவிழாக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் சார்பாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் காந்தி சிலை மற்றும் காமராஜர் சிலை அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு குடியரசு தினக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
உளவுத்துறை மூலமாக, குடியரசு தின விழாவைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தகவல் அளித்துள்ளதை அடுத்து பாதுகாப்புகள் பலப்படுத்த பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளுக்காக தமிழக காவல்துறை சார்பில் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்தும், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில்வே நிலையங்கள் , பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், வழிப்பாட்டுத் தலங்கள், மால்கள் ஆகிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இருவரை டெல்லிப் போலிஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.