1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (12:58 IST)

விஷ ஊசி போட்டு 3 பேரை கொலை செய்த ரியல்எஸ்டேட் அதிபரின் பரபரப்பு வாக்குமூலம்

விஷ ஊசி போட்டு 3 பேரை கொலை செய்த ரியல்எஸ்டேட் அதிபரின் பரபரப்பு வாக்குமூலம்

கள்ளக்காதல் விவகாரத்தில் 3 பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்தது எப்படி என்று கைதான ரியல் எஸ்டேட் அதிபர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


 
சென்னை நீலாங்கரையை அடுத்துள்ள ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். ரியல் எஸ்டேட் அதிபர். கள்ளக் காதல் விவகாரத்தில் 3 பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்தது தெரியவந்தது.
 
இது தொடரப்க ஸ்டீபனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பல அதிர்ச்சித் தகவல்களை அவர் கூறினார்.
 
இது குறித்து ஸ்டீபன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
 
எனக்கும், எனது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் என்னுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான எனது மனைவி என்னை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.
 
இதற்கு சென்னை ஆயிரம் விளக்கில் வசித்து வந்த எனது மைத்துனர் ஜான் பிலோமின்தான் காரணம் என்பதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
 
இதற்காக பாலாஜி, முருகானந்தன் ஆகியோரின் உதவியை நாடினேன். காவல்துறையினரிடம் சிக்காமல் நூதன முறையில் அவரை தீர்த்து கட்டுவது எப்படி? என இணைய தளத்தில் தேடினேன். 
 
அப்போது விஷ ஊசி போட்டு கொலை செய்யும் தகவல்கள் கிடைத்தன. இதற்காக மும்பை சென்று ரூ.1½ லட்சம் செலவழித்து அங்கிருந்து பொட்டாசியம் சயனைடு என்ற வேதிப்பொருளை வாங்கி வந்தேன்.
 
அதை விஷ ஊசியாக செலுத்தி ஜான் பிலோமினை கொலை செய்ய திட்டமிட்டேன். ஊசி மூலம் விஷத்தை செலுத்துவதற்கு நூதனமான முறையை பயன்படுத்தினேன்.
 
இதற்காக குடையின் பின்பகுதியில் கம்பி போன்று நீண்டு கொண்டிருக்கும் பகுதியின் நுனியை வெட்டினேன். அந்த நுனிப்பகுதியின் உள்ளே விஷம் ஏற்றப்பட்ட ஊசியை வைத்து இணைத்தேன். 
 
அந்த குடையை சாதாரணமாக மோட்டார் சைக்கிளில் பாலாஜியும், முருகானந்தமும் கொண்டு சென்றனர். பின்னர் ஆயிரம் விளக்கு பகுதியில் ஜான் பிலோமின் ரோட்டில் நடந்து சென்ற போது அந்த குடையை அவர் மீது குத்துவது போல் அதன்முனையில் இருக்கும் ஊசியை அவர் மீது குத்தினார்கள்.
 
சாலையில் செல்வோருக்கு இது யதார்த்தமான நிகழ்வாக தெரிந்ததால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
 
ஆனால் 5 நிமிடத்தில் விஷம் ஏறி ஜான் பிலோமின் இறந்து விட்டார். அவரது உடலை காவல்துறையினர் பரிசோதனை செய்த போது விஷ ஊசி போட்டதாக தெரியவில்லை.
 
நெஞ்சு வலிக்கான அறிகுறியே தென்பட்டது. இதனால் அந்த கொலையில் இருந்து நான் தப்பினேன்.
 
இதுபோல் உத்திரமேரூரில் ஒரு பெண்ணுடன் எனக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதற்கு இடையூறாக இருந்த அவரது கணவர் ஸ்ரீதர் என்பவரையும் பாலாஜி, முருகானந்தன் ஆகியோரை கொண்டு அதேபோல் விஷ ஊசி போட்டு கொலை செய்தேன். 
 
பின்னர் மடிப்பாக்கத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் எனக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதற்கு அவரது கணவர் ஹென்றி இடையூறாக இருந்தார்.
 
எனவே ஹென்றியை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக சதீஷ்குமார் உதவியை நாடினேன். அவர் மூலம் ஹென்றியையும் விஷ ஊசி போட்டு கொலை செய்தேன். இதற்காக சதீஷ்குமாருக்கு ரூ.1 லட்சம் கொடுத்தேன்.
 
இதற்காக விஷ ஊசியில் 1 மில்லி அளவு வேதிப்பொருளை செலுத்தினாலே போதும். ஆனால் நான் 5 மில்லி அளவு செலுத்தி 3 பேரையும் கொலை செய்தேன்.  இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக காவல்துறைறையினர் தெரிவித்தனர்.
 
இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஸ்டீபன் விட்டில் சோதனை நடத்தினர். இதில் அங்கிருந்து 10 சிரஞ்ச்கள், 10 ஊசிகள் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும், வெளிநாட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றினர்.