பட்டாசு ஆலையில் விபத்தில் மூவர் பலி: பாமக தலைவர் இரங்கல்
பட்டாசு ஆலையில் விபத்தில் மூவர் பலியானதை அடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
கடலூர் மத்திய சிறை அருகில் எம்.புதூர் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்து விட்டனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த இருவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
அவர்களுக்கு தீக்காய வல்லுனர்களைக் கொண்டு சிறப்பான மருத்துவம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் விரைவில் நலம் பெற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்!