லாபத்தை விட உயிர் முக்கியம்; தொழிற்சாலைகளை மூடுங்கள்! – ராமதாஸ் வலியுறுத்தல்!
கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துள்ள நிலையில் தேவையற்ற தொழிற்சாலைகளை மூட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதியும் உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகள் என்ற பெயரில் அத்தியாவசியமற்ற பல பெரிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் பணியாற்றும் ஆலைகள் தொடர்ந்து இயங்குவதால் அந்த ஆலைகளில் கொரோனா வேகமாக பரவுகிறது; அவை மூடப்பட வேண்டும்!” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் “மின்னுற்பத்தி நிலையங்கள், உணவுப்பொருள் தயாரிப்பு ஆலைகள் போன்றவையே அத்தியாவசியப் பொருள் தயாரிப்பு ஆலைகள். மகிழுந்து ஆலைகள், கண்ணாடி ஆலைகள், உதிரிபாக ஆலைகள் போன்றவை இயங்க வேண்டிய தேவை என்ன? நிறுவனங்களின் லாபத்தை விட தொழிலாளர்களின் உயிர்கள் முக்கியம்!” என்று கூறியுள்ளார்.