தஞ்சை தேர் விபத்து; பலி அதிகரிப்பு! – பிரதமர் மோடி, அரசியல் தலைவர் இரங்கல்!
தஞ்சாவூரில் தேர் ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மின்சார விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் கோவிலில் 94வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு தேர்வலம் விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில் தேர் நகர்வலம் முடிந்து கோவிலை நெருங்கியபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது. இதனால் தேரினுள் நின்ற 10 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதால் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அசம்பாவிதம் நடந்த பகுதிக்கு நேரில் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி “தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் நடந்த அசம்பாவிதம் ஆழமான வலியை உண்டாக்குகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்கல் இந்த துயரிலிருந்து மீண்டு வர வேண்டும். சிகிச்சை பெறுவோர் நலம்பெற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த தேர் விபத்து சம்பவத்திற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.