செல்லப் பிராணிகளுக்கு உரிமம்.! 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம்.! சென்னை மாநகராட்சி தகவல்..!!
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவதற்கு கடந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 930 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் ஆண்டுதோறும் உரிமம் பெற வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயம் என்ற அறிவிப்பினை தொடர்ந்து இணைய வழியில் செல்லப்பிராணிகள் உரிமம் பெறும் வழிமுறைகள் வெளியிடப்பட்டன.
www.chennai corporation.gov.in என்ற இணையதளத்தில் செல்லப் பிராணிகள், மற்றும் உரிமையாளரின் விவரங்கள் அனைத்தும் பதிவு செய்து ரூ.50 கட்டணம் செலுத்தி உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிக்கு உரிமம் பெற தவறும் பட்சத்தில் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 10ம் தேதி மாநகராட்சி எச்சரித்துள்ள நிலையில் 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பித்ததாக சென்னை மாநகராட்சி கால்நடை துறை தெரிவித்துள்ளது.
விண்ணப்பித்த 2300 பேரில் இதுவரை 930 பேருக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆன்லைன் மூலமாக கடந்த 10 மாதத்தில் இதுவரை 272 பேர் மட்டுமே செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற்ற நிலையில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 2300 பேர் விண்ணப்பித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.