'ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு' அதிமுக ஆதரவு- எடப்பாடி பழனிசாமி
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்ட மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யவிருப்பதாக தகவல் பரவியது.
இதையடுத்து, வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட மசோதா தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தும் சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று தன் டுவிட்டர் பக்கத்தில்,
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற அதிமுக வலியுறுத்துகிறது.
இது நம் நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது பெரும் செலவையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும் மற்றும் கூட்டாட்சி மற்றும் மாநில ஆகிய இரண்டிற்கும் தேர்வு செய்யப்படும் எந்த அரசாங்கத்திற்கும் தம் கொள்கையை செயல்படுத்த இடையூறு இல்லாத ஆட்சியை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.