செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (16:31 IST)

மதுவிலக்கு சட்ட மசோதாவிற்கு ஓகே..! தமிழக ஆளுநர் ஒப்புதல்.!!

governor ravi
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
 
கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து, கள்ளச்சாராயம் விற்போருக்கு கடுமையான தண்டனை விதிக்க, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த மாதம் 29ஆம் தேதி ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டது.
 
ஏற்கனவே அமலில் உள்ள, 1937ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில், சில விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், அதை தயாரித்தல், விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ரூ.10 லட்சம் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிக்க திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
 
மது அல்லது போதை மருந்து ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்றோ அல்லது விற்பனைக்கு அளிப்பதாகவோ விளம்பரம் செய்தால், பிரசுரித்தால், அந்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையுடன், 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
 
இச்சட்டத்தில் உள்ள விதிகளின்படி, உரிமம் பெறாமல் எந்த இடத்திலும் மது அருந்த அனுமதித்தல் கூடாது. அவ்வாறு அனுமதிக்கப்பட்டால், அந்த இடத்தை தாசில்தார் நிலைக்கு குறையாத அலுவலர் மூடி முத்திரையிட வேண்டும். சம்பந்தப்பட்டவர் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தற்போது இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.