ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 26 ஜூன் 2016 (15:24 IST)

சுவாதியை கொலை செய்தது கூலிப்படையை சேர்ந்தவனா? - காவல்துறை தீவிர சோதனை

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி படுகொலை செய்தது கூலிப்படையை சேர்ந்தவரா என்ற கோணத்தில் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 
சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்தை டிஐஜி பாஸ்கர் நேற்று சனிக்கிழமை மீண்டும் பார்வையிட்டார். அப்போது அவர், இந்த கொலை குறித்து விசாரிப்பதற்கு ரயில்வே காவல்துறை எஸ்.பி. விஜயகுமார், எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழு சுவாதியின் பணியிடம், தோழிகள், உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
 
மேலும், அவர் பயணித்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் கால்டாக்சி ஓட்டுநர்களிடமும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், சிசிடிவி கேமராவில் பதிவான சந்தேக நபரைத் தேடி வரும் நிலையில், கொலையாளியை விரைவில் பிடித்துவிடுவோம் என்றார்.
 
மேலும், இந்த கொலையை செய்த நபர் கூலிப்படையைச் சேர்ந்தவராகவும் இருக்கக்கூடும் என்று கூறிய டிஐஜி பாஸ்கர், ரயில் நிலையத்தில் சுவாதியுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று வெட்டிவிட்டு, ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் உதவிக்கு வரும் முன் அவர் தப்பி சென்றிருப்பதைப் பார்க்கும்போது, அந்த நபர் கூலிப்படையைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.
 
இந்த கொலை குறித்து பொதுமக்களுக்கு தகவல் ஏதும் தெரிந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.