நானும், சசிகலாவும் அரசியலுக்கு வரக்கூடாது என சதி நடக்கிறது: டிடிவி தினகரன்
சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் சசிகலாவுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறாஇ அதிகாரிகளின் சோதனை நடந்து வருகிறது. டிடிவி தினகரனின் அடையாறு வீட்டிலும் இரண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய காவல்துறை உதவியுடன் சென்றதாகவும், அவர்களில் ஒருவர் சற்று நேரத்திற்கு முன் வெளியேறிவிட்டதாகவும், தற்போது அங்கு ஒரே ஒரு அதிகாரி மட்டும் சோதனை செய்து வருவதாகவும் செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன
இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், 'அடையாறில் உள்ள எனது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறவில்லை என்றும் பாண்டிச்சேரியில் உள்ள தனது பண்ணை வீட்டில் மட்டுமே வரிமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாகவும், தங்களை மிரட்டிப்பார்க்கவே வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் எனக்கு பயம் கிடையாது, நானும், சசிகலாவும் அரசியலுக்கு வரக்கூடாது என சதி நடக்கிறது என்றும் கூறினார்.
நேற்று பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த பின்னர் பேட்டியளித்த தினகரன், மத்திய அரசு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி விஷயங்களில் தோல்வி அடைந்துவிட்டது என்று கூறியதை அடுத்தே இந்த சோதனை நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.