வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2024 (13:26 IST)

மருத்துவர் தாக்குதல் எதிரொலி: அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டுப்பாடு..!

சென்னைக்கு கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அரசு மருத்துவமனையில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று, சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பாலாஜி என்ற டாக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் சிரமத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவர்கள் உடன் அமைச்சர் ஆர். சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தி, மருத்துவர்கள் அனைத்து கோரிக்கைகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளை கவனித்துக் கொள்ள வருபவர்களுக்கு கையில் ஒரு அடையாள டேக் கட்டப்படும் எனவும், அவர் எந்த நோயாளியை பார்க்க வந்தவர் எந்த வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் அந்த டேக்கில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டேக் கையில் இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை சென்னையில் மட்டும் அல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும், இனிமேல் நோயாளிகளை பார்க்க யார் வேண்டுமானாலும் மருத்துவ வளாகத்திற்கு செல்வது சாத்தியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இந்த நடைமுறை அமலில் இருந்து வரும் நிலையில், தற்போது இது தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran