செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (11:24 IST)

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை..! – அறிக்கையில் இருப்பது என்ன?

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக முதல்வரிடம் ஆய்வு குழு அறிக்கை சமர்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட செயலிகளால் மக்கள் பலர் பணத்தை இழப்பதுடன், மேலும் கடன் வாங்கி விளையாடி கடன் கட்ட முடியாமல் சிக்குவது, மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு குழுவை அமைத்தார். கடந்த சில மாதங்களாக ஆய்வுகளை நடத்திய ஆய்வுக்குழு தற்போது இந்த ஆய்வின் அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்துள்ளனர்.

அதில் “ஆன்லைன் விளையாட்டுகளால் திறன் வளர்ச்சி மேம்படுவதாக கூறுவது தவறானது. கடந்த சில மாதங்களில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த 17 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பொதுமக்களின் உடல்நலன் ஆன்லைன் விளையாட்டுகளால் பாதிக்கப்படுகிறது. இயல்பு நிலைக்கு எதிராக ஆன்லைன் விளையாட்டுகள் உள்ள நிலையில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தை கைவிட்டு புதிய சட்டம் இயற்ற வேண்டும்” என அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.