103 மரணங்கள் மறைக்கப்பட்ட விவகாரம்: நெல்லை அரசு மருத்துவமனை விளக்கம்
நெல்லையில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அரசின் அறிவிப்பின்படி 182 மட்டுமே இருந்தது. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இதுகுறித்து வெளியான தகவலின்படி 285 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே 103 மரணங்கள் மறைக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது
இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் கண்டனத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் அவர்கள் விளக்கம் அளித்து உள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தென்மாவட்டங்களில் இயங்கிவரும் பெரிய மருத்துவமனை ஆகும். கோவிட்-19 நோய்வாய்ப்பட்டவர்கள் அனைவரும் இந்த மருத்துவமனையைத் தான் நாடி குணமடைந்து வருகிறார்கள். கடந்த 5 மாதங்களில் 4238 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 3444 நபர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 130 பேர் குழந்தை பெற்று பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளனர். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை சிகிச்சை பலனின்றி 285 நோயாளிகள் (25.08.2020 வரை) இறந்துள்ளனர். இவர்களில் 145 பேர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதுதவிர 19 பேர் தூத்துக்குடி, 88 பேர் தென்காசி மற்றும் 33 பேர் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்.
நேற்று மாலை இறப்பு எண்ணிக்கைகள் குறித்து தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.டி.ஐ. தகவல்களை தவறாக சித்தரித்து இறப்புகளின் எண்ணிக்கையை இம்மருத்துவமனை மறைத்து வருவதாக தவறாக கூறியுள்ளார்கள். எங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனாவை எதிர்த்துப் போராடும் போது அவர்களின் வாழ்க்கையையும் அவர்களது குடும்பத்தின் பாதுகாப்பையும் துச்சமென நினைத்து பணி செய்து வரும்போது, இதுபோன்ற தவறான தகவல்கள் மருத்துவர்களையும், செவிலியர்களையும் மன வேதனையடையச் செய்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.