1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 7 ஜூன் 2024 (13:02 IST)

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்..! மத்திய அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்.!

edapadi
மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்து பழையபடி 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த ஆவன செய்யவும் புதிதாக அமையவுள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
 
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியாகி உள்ள நிலையில், நீட் தேர்விற்கான மதிப்பெண் வழங்கும் முறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
 
தேர்வு மையங்களில் ஏற்பட்ட காலதாமத்திற்கு ஏற்ப கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக கூறும் நிலையில், இதுகுறித்து நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமையின் விளக்கமும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோக, வடமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது முதல் வினாத்தாள் வழங்குதல் வரை பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
 
இதற்கிடையே, ஜூன் 14ம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவசர அவசரமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று வெளியானதில் கூட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்றும் இக்குளறுபடிகள் குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே நீட் தேர்வு குறித்த பல்வேறு காரணங்களாலும், இதுபோன்ற நடைமுறை குளறுபடிகளும், அஇஅதிமுக தொடர்ச்சியாக கொண்டுள்ள நீட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாட்டை உறுதிபடுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
இந்த ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்கவும், மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்து பழையபடி 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த ஆவன செய்யவும் புதிதாக அமையவுள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.