1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (10:09 IST)

ரூ. 5.78 கோடி ரயில் கொள்ளை விவகாரத்தில் உதவிய நாசா

சேலத்தில் இருந்து சென்னைக்கு 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி வந்த ரயில் பெட்டி ஒன்றில் ரூ.323 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டன. அந்த ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தி வரும் நிலையில் கொள்ளையர்கள் குறித்து இன்னும் எந்த துப்பும் துலங்கவில்லை
 
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி தனிப்படை போலீசார்களுக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் உதவி செய்துள்ளது. சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் 350 கி.மீ.தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களாக நாசா அனுப்பியுள்ளதாகவும் இந்த புகைப்படங்கள் கொள்ளையர்களை பிடிக்க பெரும் உதவியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
 
இந்த வழக்கு குறித்த உதவி செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம் நாசாவிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்போது நாசா இந்த படங்களை அனுப்பியுள்ளது. இந்த படங்களின் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் அழைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டு தற்போது  11 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளனர்.

விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மத்திய பிரதேசம், பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என முதல் கட்ட  தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணையில் ரயில் கொள்ளை குறித்த வழக்கில் பல திடுக்கிடும் திருப்பங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது