வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 22 மார்ச் 2018 (13:11 IST)

தினகரன் பாஜகவை எதிர்க்கவில்லை - போட்டு உடைத்த நாஞ்சில் சம்பத்

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் பாஜகவை எதிர்த்து பேசி நான் பார்த்ததே இல்லை என அவரிடமிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவின் தலைமையாக சசிகலாவை ஏற்க மாட்டேன் என பரபரப்பு கிளப்பிய நாஞ்சில் சம்பத், அடுத்த சில நாட்களிலேயே சசிகலாவுடன் இணைந்து கொண்டார். சசிகலா சிறைக்கு சென்ற பின் தினகரனின் தீவிர ஆதரவாளராக சம்பத் மாறினார்.
 
அந்நிலையில், சமீபத்தில் தினகரன் தனது அணிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என பெயர் சூட்டினார். மேலும், அதிமுக கொடியில் ஜெ.வின் படத்தை பதிந்து புதிய கொடியை அறிமுகப்படுத்தினார். எனவே, அண்ணாவும், திராவிடமும் இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன் எனக்கூறி அவரது அணியிலிருந்து நாஞ்சில் சம்பத் வெளியேறினார். மேலும் இனிமேல் அரசியலில் ஈடுபடப்போவதில்லை, இலக்கிய மேடைகளில் மட்டுமே என்னை பார்க்கலாம் என அதிரடி பேட்டி கொடுத்தார்.

 
இந்நிலையில், பிரபல வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ‘ தினகரனிடம் திராவிட சிந்தனை இல்லை. திராவிடம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என பாஜக, சங் பரிவாரங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், அதை தினகரன் நடைமுறைப் படுத்தியுள்ளார் என சந்தேகம் எழுந்துள்ளது. அந்த சந்தேகத்தை போக்க வேண்டியது அவரின் கடமை. மேலோட்டமாக பார்த்தால் அவர் பாஜகவை எதிர்ப்பது போல் தோன்றும். ஆனால், பாஜகவை தீவிரமாகவும், தீர்க்கமாகவும் எதிர்த்து தினகரன் பேசி நான் பார்த்ததே இல்லை” என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
 
இதன் மூலம் தினகரன் பாஜகவிற்கு எதிராக செயல்படவில்லை என்கிற கோணத்திலேயே நாஞ்சில் சம்பத் பேட்டியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.