வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 ஜூலை 2021 (16:06 IST)

யார்கோள் தடுப்பணை… இந்திய கம்யுனீஸ்ட் கட்சி கண்டனம்!

கர்நாடகா அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைக் கட்டியுள்ளது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் முத்தரசன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘கர்நாடக மாநில அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே யார் கோள் என்ற இடத்தில் தடுப்பணை கட்டி முடித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு இதுவரை கிடைத்துவந்த நீராதாரத்தைத் தடுத்துள்ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும், நீர்பகிர்வு கோட்பாடுகளுக்கும் எதிரானதாகும். ஐம்பது கோடி கன அடி தண்ணீரைத் தேக்கும் யார் கோள் அணை திட்டத்தால் தமிழகத்தின் குடிநீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் உருவாகும்.

சாத்தனூர் அணை தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டியுள்ளதால்தென்பெண்ணை ஆற்றின் நீராதாரம் பறிபோயுள்ளது. கர்நாடக அரசு தமிழகத்தின் சட்டபூர்வ தண்ணீர் உரிமையைத் தொடர்ந்து மறுத்துவருவது மாநிலங்களுக்கு இடையிலான உறவுகளை பலவீனப்படுத்தும். இதுபோன்ற நேர்வுகளில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, பாரபட்சமில்லாத, சார்பற்ற நடுநிலையோடு அணுகித் தீர்வு காண்பதுதான் கூட்டாட்சிக் கோட்பாட்டை உறுதிப்படுத்தும்.

ஆனால், மத்திய பாஜக அரசு கர்நாடக அரசின் அத்துமீறலைத் தொடர்ந்து ஆதரித்து வருவதும் அல்லது சார்பு நிலை எடுப்பதும் தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். கர்நாடக மாநில அரசின் வரம்பு மீறிய நடவடிக்கைகளை எதிர்த்து, சட்டப் போராட்டத்தைத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைத் திரட்டி தண்ணீர் உரிமை பாதுகாப்புக்கான மக்கள் இயக்கத்தைக் கட்டமைப்பது உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறதுஎனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.