1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (16:10 IST)

மின்சாரம் தயாரிக்க நிலக்கரி வேண்டும்..! – பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில காலமாக தொடர் மின்வெட்டு அதிகரித்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டிய மின்சாரம் வழங்கப்படாததே மின் தடைக்கு காரணம் என தெரிவித்திருந்தார்.

மேலும் நிலக்கரி பற்றாக்குறையால் நாட்டில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நிலக்கரி வரத்து குறைந்துள்ளதால் மின் உற்பத்தி பணியில் பாதிப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவையான நிலையில் வரத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் மின் விநியோகம் சீராக நடக்க எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, பாரதீப் மற்றும் விசாகப்பட்டிணம் துறைமுகங்களில் ஒரு நாளைக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.