செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (11:05 IST)

அண்ணாமலையே நீட் வேண்டாம் என சொன்னவர் தான்... மா.சுப்பிரமணியன் பேட்டி!

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு அவசியமில்லை என சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை கூறியிருந்தார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

 
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுனர் ஆர்.என்.ரவி அதை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
அதை தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா நேற்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நேற்றே ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து தெரிவித்ததாவது, 
நீட் தேர்வுக்கு பாஜக போட்ட முடிச்சை அவர்களே அவிழ்ப்பார்கள். நீட் தேர்வு அவசியமில்லை என்று சொன்னவர் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு அவசியமில்லை என சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை கூறியிருந்தார் என்பதை மறந்துவிட முடியாது. 
 
மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கல்வி திறன் அதிகம் உள்ளது என சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பேட்டியளித்திருந்தார். மாணவர்களுக்கு கல்வி திறன் அதிகமாக உள்ளதால் நீட் தேர்வை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கவும் அண்ணாமலை கோரியிருந்தார் என்பதையும் சுட்டி காட்டியுள்ளார்.